2019 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால், 2024 மக்களவை தேர்தலில் அவர்களின் 10 சதவீத வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். ஏனெனில், பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. ராயபுரம் தொகுதியில் நான் தோற்க வேண்டிய ஆளே இல்லை. ஆனால், பாஜகவால் தோல்வி அடைந்துவிட்டேன்” என தனது மனகுமுறல்களை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதியானது. இதன் தொடர்ச்சியாக ஜெயக்குமாரை செய்தியாளர்கள் சந்திப்பில் எங்கும் காணவில்லை. இந்நிலையில், பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததால், எடப்பாடி பழனிசாமி மீது ஜெயக்குமார் அதிருப்தியில் உள்ளார் என்றும், மீண்டும் ஒரு உட்கட்சி பூசல் வெடிக்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் இருந்து நான் விலகுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை. திருமாவளவன் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், தான் கட்சியிலிருந்து விலகுவேன் என எங்கும் கூறவில்லை. எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்” எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.