தமிழ்நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து, நகைப்பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அண்மையில் நடைபெற்ற தொடர் நகை திருட்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், பேருந்துகளில் கைவரிசை காட்டும் கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராணி (54) என்ற பெண் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் மட்டுமின்றி, பழனியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற நபரும் சேர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரும், திருமணம் செய்துகொள்ளாமல் கள்ளக்காதல் ஜோடியாக கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாகவே வாழ்ந்து, திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவரும் வயதான பெண்கள், தனியாக பயணம் செய்யும் போது, அருகில் அமர்ந்து கோவில் பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்து, நகைகளை திருடியுள்ளனர்.
வெள்ளரிக்காய், மாங்காய் போன்றவற்றிலும் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்கள் மயங்கியதும் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். திருடிய நகைகளை தங்க நாணயங்களாக மாற்றி, புதிய நகைகள் வாங்கியுள்ளனர். பின்னர், மீண்டும் அந்த நகைகளை விற்று பணம் சம்பாதித்து ஆடம்பட வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது திருட்டு கள்ளக்காதல் ஜோடியான ராணி மற்றும் பரமேஸ்வரனை கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்துள்ளனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.