சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவின் 5ஜி சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 5ஜி சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. 2030 இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். அந்த நோக்கில் அடுத்தகட்டமாகத் தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை நகரங்களில் ஜியோவில் ட்ரூ 5ஜி சேவையை நாளை (ஜனவரி 10) தி.நகரில் உள்ள ஜிஆர்டி கன்வென்சன் மையத்தில் மாலை 5 மணிக்கு மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.