RR VS PBKS: ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் 2025 இன் 18 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 5) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் விளையாடி ரன் குவித்தனர்.
இதனால் பவர்பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. பின்னர் ரன் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 89 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது அணிக்கு பெரும் பின்னடைவாக ஆனது. ரியாக் பராக் அடுத்ததாக களம் இறங்கினார். 40 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் 45 பந்தில் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா அடுத்து வந்து 7 பந்தில் 12 ரன் எடுத்து வெளியேற ரியான் பராக் உடன் ஹெட்மையர் 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி 200 ரன்களை தொட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடிய போதிலும் 19 ஆவது ஓவரில் ஹெட்மையர் 12 பந்தில் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 19 ரன் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. 206 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஓப்பனிங் ஆட வந்தனர். முதல் ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீச முதல் பந்திலேயே பிரியான்ஷ் ஆர்யா போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளுக்கு 10 ரன்களில் போல்டானார்.
இரண்டு ஓவருக்கு பஞ்சாப் அணி 25/2 எடுத்திருந்தது. 3 ஆவது ஓவரில் சந்தீப் சர்மா பந்தில் ஸ்டோய்னிஸ் ஒரு ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 ஆவது ஓவரில் குமார் கார்த்திகேயா பந்தில் பிரப்சிம்ரன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 78/4 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவரில் மேக்ஸ்வெல் 30(21) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 155 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் பஞ்சாப் அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள், சந்தீப் சர்மா, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குமார் கார்த்திகேயா, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
Readmore: டெல்லி அணிக்கு எதிராக வரலாறு படைத்த எம்.எஸ். தோனி!. உலகின் முதல் பேட்ஸ்மேன் ஆனார்!.