வக்ஃப் மசோதா குறித்த ஜேபிசி அறிக்கை பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அமைக்கப்பட்டது.
பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 36 எம்.பி.க்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அமைக்கப்பட்டது முதல் 38 முறை கூடியுள்ளது. நாடு முழுவதும் பயணம் செய்து கருத்துகளை கேட்டுள்ளது. வக்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு மாற்றத்தையும் நிராகரித்து, கடந்த வாரம் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால், கடந்த 30 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கூட்டுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Read more : விவசாயிகளுக்கு குட்நியூஸ்..! இந்த தேதியில் ரூ.2000 பணம் கிடைக்கும்..