என் மண், என் மக்கள் யாத்திரை 200-வது தொகுதி நிறைவையொட்டி, சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருகிறோம். மக்கள் மனதில் நமது நல்லாட்சியின் அருமை தெரிகிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம். தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக. இந்த புண்ணிய பூமியில் இதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இதில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் யாத்திரை, ஏன் வேள்வியும் கூட.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம், பிரதமர் நரேந்திர மோடி பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. ஆன்மிகம் வளர்ந்து விட்டால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தந்து விட்டால் இந்த பாரதம் முழுமை அடையும்.
தமிழகத்தில் பொய் பேசி ஆட்சி நடத்துகிறார்கள். சமீபத்தில் சென்னையில் வந்த வெள்ளமே அதற்கு சான்று. ரூ.4 ஆயிரம் கோடி, ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்தோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் மக்கள் துன்பப்பட்டதை மறக்க முடியுமா? இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பா.ஜனதா எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்.
சென்னை நகரம் பா.ஜனதா பக்கம் வரவேண்டும். சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். புதிய சென்னை உருவாக்க வேண்டும். இன்றைக்கு எனது யாத்திரையின் மூலம் 200-வது தொகுதிக்கு வந்திருக்கிறேன். 234-வது தொகுதியில் இந்த யாத்திரையை நிறைவு செய்யும்போது ஒரு புதிய சரித்திரம் பிறக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும்.