நாம் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வரும். நாமும் ஏதோ முக்கியமான ஃபோன் கால் என நினைத்து எடுத்து பேசுவோம். ஆனால், அது ஸ்பேம் கால் அல்லது கஸ்டமர் கேர் கால் அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடும் எண்களில் இருந்து வரும் போன் அழைப்புகளாக இருக்கும். இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இப்படியான அழைப்புகள் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக காணலாம்.
ஆன்ராய்டு பயனாளர்கள் செய்ய வேண்டியது?
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 90% க்கும் மேல் ஆன்ராய்டு பயனாளர்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டுக்கள் அதிகமாக ஆன்ராய்டு பயனாளர்களை குறிவைத்தே நடக்கிறது. எனவே தேவையற்ற அழைப்புகளை நிறுத்தவோ, முடக்கவோ பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு பயன் தரும். முதலில் பிளே ஸ்டோரில் கூகுள் டயலரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கூகுள் டயலரில் வலது மேல் ஓரத்தில் இருக்கும் 3 புள்ளிகளை அழுத்தினால் செட்டிங்கிற்கு செல்லும். செட்டிங்கில் Caller ID and Spam என்ற தேர்வு இருக்கும். அதனுள் சென்றால் Filter Spam Calls என்று இருக்கும். அதை அழுத்தினால் உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் முடக்கப்படும்.
ஒரு வேளை நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் கைபேசியை பயன்படுத்துவோராக இருந்தால் ஸ்பேம் கால்களை முடக்குவது மிக சுலபம். உங்கள் சாம்சங் டயலரில் உள்ள செட்டிங்கிற்கு சென்றாலே ஸ்பேம் அழைப்புகளை முடக்கும் (Block Spam and Spam Calls) எனும் தேர்வு இருக்கும் அதன் உபயோகித்து பயன்பெறலாம். எனவே சைபர் திருட்டுக்கள் தொடர்பான அழைப்புகள் உங்கள் கைப்பேசியில் வராமல் தடுக்க மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
ஃஐபோன் பயனாளர்கள் செய்ய வேண்டியது..?
ஃஐபோனில் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு முதலில் ட்ரூ காலர் எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் எண் மற்றும் இ-மெயில் முகவரி மற்றும் அதில் கேட்கும் விவரங்களை நிரப்பிய பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கிற்கு செல்ல வேண்டும். அதில், செட்டிங்கில் உள்ள போன் செட்டிங் விவரங்களுக்குள் செல்ல வேண்டும். அதில் அழைப்புகளை முடக்குவதற்கான (Call Blocking) செட்டிங்ஸ் இருக்கும். அதனுள் சென்றால் 4 விதமான விருப்பங்களை காண்பிக்கும். அவை அனைத்தையும் ஆன் செய்தால் உங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் இனி வரவே வராது.