சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். கூலி வேலை செய்து வரும் இருவருக்கு வான்மதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவி வான்மதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மதியம் வான்மதி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வருவதாக தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன்,” அங்கு யாரை பார்க்க போகிறாய்” என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் வான்மதி ரயிலேறி கிண்டி சென்றிருக்கிறார். கணவர் வெங்கடேசனும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். கிண்டி ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு வான்மதி இறங்கிய போது அவரை பின்தொடர்ந்து சென்ற வெங்கடேசன், அவரை தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார்.
சண்டை முற்றவே ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வான்மதியை கை, கால், முதுகு பகுதியில் சரமாரி குத்தியும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் ரயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, அங்கு வந்த ரயில்வே போலீசார், வான்மதியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் கணவனே மனைவியை ஓட ஓட கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.