கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து டிஜிபிக்கு கடிதம் எழுதியது..
இதுதொடர்பாக கலாஷேத்ரா இயக்குனர், நமது மாநில காவல்துறை தலைவரை சந்தித்து, கலாஷேத்ராவில் பாலியல் புகார் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.. தேசிய மகளிர் ஆணையமே நாங்கள் விசாரணையை முடித்துவிட்டோம் என்று டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதியது.. இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இன்னும் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை..
இந்த நிலையில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், கலாஷேத்ராவில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.. இந்த விவகாரம் என் கவனத்திற்கு வந்த உடன் மாணவிகளின் போராட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..