கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக அவர் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் கலவரம் மூண்டது. நாற்காலிகள் , மாணவர்களின் இருக்கைகள் என அனைத்தையும் உடைத்தனர். பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதனால் கடந்த 17-ம் தேதி இந்த பள்ளி மூடப்பட்டது. பள்ளியில் வகுப்புகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் ஆன்லைன் முறையிலும் , சில வகுப்புகளுக்கு வேறு பள்ளிகளிலும் பாடம் எடுக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளியை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனியாமூர் தனியார் பள்ளியை திறக்க வேண்டும் என கோரி 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் , ’’ கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. எனினும் மாணவர்களை நோய் பரவும் அபாயம் காரணமாக பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் வழியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்டது. 5 , 6 வாரங்களே பள்ளிக்கு சென்றிருப்பார்கள். மாணவி ஒருவர் உயிரிழந்ததால் அதில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சம்பவம் நடந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் படிப்பு ஆப்லைன் கல்வி போல இல்லை. எந்த வசதியும் இல்லை. எனவே உடனடியாக பள்ளி திறக்க வேண்டும் என்றனர். ’’ இந்த போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் கோரிக்கை மனு அளிக்க முடியவில்லை. உதவி அதிகாரிகள் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மாலை 3 வாக்கில் பெற்றோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் . இது பற்றி விவாதிக்கப்படும். என பத்திரிகையாளர்களுக்கு ஆட்சியர் தெரிவித்தார்