கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் மாணவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஒரு நாள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும், நேற்று பிற்பகல் 12 மணி முதல் இன்று பிற்பகல் 12 மணி வரை விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேற்று சிபிசிஐடி போலீசார் அவர்களை அழைத்துச் சென்று 12 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு நள்ளிரவு விழுப்புரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை மீண்டும் சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். முழுமையான விசாரணைக்கு பிறகே மாணவி மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என தெரிவித்தனர்.