வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகியவை போட்டியிடுகின்றன. இவை தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
18-வது பொது தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தவிர மனிதநேய மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி தருவதாக திமுக ஒப்பந்தம் செய்துள்ளது
இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மநீம கட்சி பிரச்சாரம் செய்ய இருக்கிறது. அந்தக் கட்சியின் நிறுவனரான நடிகர் கமல்ஹாசன் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். ஈரோடு தொடர்ந்து சேலம் திருச்சி சிதம்பரம் சென்னை மதுரை தூத்துக்குடி கோவை மற்றும் பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.
கமல்ஹாசனின் தேர்தல் சுற்றுப்பயணம் நாளை தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதற்கு முன்னதாக திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இது பதவிக்கான கூட்டணி அல்ல மக்களின் நலனுக்கான கூட்டணி என கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல வியூகம் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.