மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து, திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் மட்டும் பெற்றுள்ளதற்கு கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மக்கள் நீதி மய்யம் கேட்ட சீட்களை ஒதுக்க திமுக சம்மதிக்காத நிலையில், இறுதியாக 1 ராஜ்யசபா சீட் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம 2.6% வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலிலும் அதே அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றது. கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மநீம பெற்றிருந்தது. மேலும் 2 தேர்தல்களிலும் பல இடங்களில் மூன்றாம் இடத்தையும் பெற்றது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மநீமவுக்கு லோக்சபா சீட் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மநீம கட்சியைச் சேர்ந்த வினோதினி வைத்தியநாதன், வெளிப்படையாகவே கமல்ஹாசனின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். “நாட்டு நலனுக்காக எடுத்த முடிவு இருக்கட்டும். அப்போ வீட்டு நலன்? உதயசூரியன்ல ஓட்டு குத்துங்கனு என்ன சொல்ல வையுங்க பார்ப்போம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பலரும் ஏமாற்றத்துடன் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். “இதற்கு மேல்… கட்சியில் இவன் வேலை பார்க்கல அவன் வேலை பார்க்கவில்லை என்று பொதுவெளியில் ஏன் பேசுறேன்னு கேட்டு எவனாவது வந்த அசிங்க அசிங்கமா கேட்பேன்” என மநீம நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தொண்டர், “இதை பொழப்பா வச்சுகிட்டு சம்பாதித்தவன் எல்லாம் எவனும் எதுவும் சொல்ல மாட்டான். ஆனால், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொந்த பணத்தை செலவு பண்ணி இரவு பகல் பாக்காம போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கொண்டு இருந்தான் பாரு.. அவனுக்கு தான் மனசு வலிக்கும். வாட்ஸ் அப் குழுவில் ஒரு தொண்டன் கருத்து” என குறிப்ப்பிட்டுள்ளதையும் ரீ-ட்வீட் செய்துள்ளார் வினோதினி.
மேலும் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள வினோதினி, “நம் ஆழ்மனது, உள்ளுணர்வு ஒன்று சரியென்றோ தவறென்றோ சொல்லும். ஆனால், அடுத்தவர்கள் செட் பண்ணும் நரேட்டிவ்வில் போய் மாட்டிக்கொள்வோம். But I’ve believed one thing consistently. Your intuition is always right. நேற்று நான் போட்ட கீச்சுக்கு வந்த எதிர்வினைகளையும், எங்கள் கட்சி கூட்டணி செய்திக்கு வந்த கருத்துக்களையும் இரவு முழுவதும் படித்தவண்ணம் இருந்தேன். பொதுவாக மனதை ரொம்ப போட்டு குழப்பிக்காத எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
ராஜ்ய சபா சீட்டுதான் என்ற சேதி வந்ததும் என் மனதில் வந்த ஃபீலிங்ஸும் கண்ணில் வழிந்த கண்ணீரும் பொய்யா, ராஜ்ய சபா சீட் ப்ளஸ் கூட்டணிக்கு பிரச்சார ஆதரவு அப்படிங்குற முடிவு சரிதானோ, பலர் சொல்வதுபோல் ஸ்மார்ட் மூவோ, மநீமவுக்கு நீண்டகால நோக்கில் நல்லதுதானோ, இதில் உள்ளர்த்தம் இருக்குமோ என்றெல்லாம் யோசனைகள். தூக்கம் தெளிவு தந்தது. நான் நேற்று ஆழ்மனதில் என்ன நினைத்தேனோ அதுதான் சரி.
நாட்டு நலனுக்காக பிரச்சார ஆதரவு சரி. வீட்டு நலனுக்காக (மநீம) ராஜ்ய சபாவைத் தவிர்த்திருக்கணும். லோக்சபா சீட் இல்லையென்றால் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே என்பதுதான் நியாயமானது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஒன்று எங்களுக்கு வந்திருக்கணும். இது அவர்களாகவே எங்களுக்கு குறைந்தபட்சம் செய்திருக்க வேண்டும். எவ்வளவு gaslight பண்ணினாலும் இதுதான் என் கருத்து.
எங்களுக்கு ராவான டீல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சமாளிப்போம். நமக்கு கிடைத்துள்ள கார்டுகளுடன் விளையாடுவோம். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் எத்தனையோ சோதனைகளை நம் தலைவர் பார்த்திருக்கிறார். இது புதிதல்ல. எங்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸுக்குத்தான். இப்போதைக்கு இதை விட்டுவிடுகிறேன். மய்யத்தினருக்கு, தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் விதமாக வேலைகளைத் தொடர்வது சாலச்சிறப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.
Read More : TVK Vijay | அடங்கேப்பா..!! இதுவரை விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?