சமீப காலமாகத் பா.ஜ.க ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரணாவத், தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாகத் தனது கட்சியின் சக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருக்கிறார்.
இமாசலப் பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். ஆரம்பத்திலிருந்தே அவரது செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கர்நாடகாவில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, “கெட்டுப்போன இளவரசர்களிடம் கட்சி இருக்கிறது. அது சந்திரனில் உருளைக்கிழங்கு பயிரிட விரும்பும் ராகுல் காந்தியோ, போக்கிரித்தனம் செய்து மீன் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யாவோ அல்லது வித்தியாசமாகப் பேசும் அகிலேஷ் யாதவோ… இந்த நாட்டின் மொழி மற்றும் கலாசாரம் புரியாதவர்களால் எப்படி இந்த நாட்டை வழிநடத்த முடியும்” என்று பேசினார்.
ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவை குறிப்பிட்டு விமர்சனம் செய்ய முயன்றபோது, அவருக்கு பதிலாக தன் கட்சி வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா என்று குறிப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய தேஜஸ்வி யாதவ், `யார் இந்தப் பெண்?’ என ட்வீட் செய்தார்.
மேலும், கங்கனா ரணாவத் இதே பேரணியில், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, அவர் காலத்தில் அம்பானியாக இருந்தார். ஆங்கிலேயர்களுடன் அவர் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவருக்கு அவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ஜவஹர்லால் நேரு எப்படி பிரதமரானார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போதிருந்து வாரிசு அரசியல் எனும் கரையான் இந்த நாட்டில் தொற்றிக்கொண்டது” என்று உரையாற்றினார்.
இதனால், மறைந்த முன்னாள் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகத் தேர்தல் ஆணையத்தில் கங்கனா மீது காங்கிரஸ் புகாரளித்திருக்கிறது. இதே கங்கனா ரனாவத் தான் ஊடக நிகழ்ச்சியொன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி என்று கூறி பல விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.