’வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 85.80 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
கன்னியாகுமரியில் குரங்கம்மை அறிகுறி என்று வெளியான தகவலில் உண்மையில்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து திரும்பிய பிறகு இன்டன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வசூலிக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை ரூ.2 லட்சம் வசூலிக்கிறது. ஆக மொத்தம் பயிற்சி பெற ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், பயிற்சி பெற ரூ.5 லட்சம் என்பது மிக அதிகமான கட்டணமாக இருப்பதாக மாணவர்கள் அரசிடம் முறையிட்டனர். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை குறைத்து வெறும் ரூ.30 ஆயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும். உக்ரைன் மாணவர்கள் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்ற உத்தரவுக்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.