ஃபெங்கல் புயல் வலுவிழந்து வரும் 30ஆம் தேதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தமிழ்நாட்டிற்கு வரும் 30ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை முதல் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எங்கெங்கு கனமழை..?
தமிழ்நாட்டில் இன்று (நவ.28) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.