கள்ளக்குறிச்சி, சக்தி தனியார் பள்ளியில் கலவரம் செய்வதற்காக வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்து பத்து இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் மூன்று நாட்கள் மது விருந்து, கறிசோறு, கொடுத்தவர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 17-ஆம் தேதி அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்ற பெயரில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பிறகு அந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தில் காவல்துறை வாகனம், பள்ளி பேருந்துகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் பள்ளியில் உள்ள தளவாட பொருட்களும், மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களும் எரிக்கப்பட்டன.
மேலும் இந்த கலவரத்தை தூண்டியது யார், அவர்களை வாட்ஸ்அப் குரூப் மூலம் ஒருங்கிணைத்தது யார், என்பது பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கலவரத்திற்கு முன்பு தனியார் பள்ளி அருகே கனியாமூர் கிராம பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 200 பேர் 14-ஆம் தேதிக்கு பிறகு மூன்று நாட்களாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தங்கி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து கறிவெட்டும் ஆட்கள் மற்றும் சமையலர்களை அழைத்து வந்து மூன்று நாட்களாக 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி மதியம் வரை மூன்று வேளையும் கறிசோறுடன், மதுவிருந்தும் வழங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கலவரக்காரர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உறவினர்கள் போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு, தங்க இடம் கொடுத்தது யார், அவர்களை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்தது யார், கறிசோறு சமைத்து கொடுத்தது, மதுவிருந்து ஏற்பாடு செய்தவர்கள் யார்? கறிவெட்டு ஆட்கள், சமையலர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் அந்த பகுதியில் விசாரணையில் செய்து வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் தங்கியிருந்த கலவரக்காரர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் மேலும் ஏதேனும் அமைப்புகளை சேர்ந்தவர்களா? என்றும் இந்த கலவரத்தில் ஈடுபட திட்டம் போட்டு கொடுத்தது யார், என்பது பற்றியும் சிறப்பு புலனாய்வு குழுவினர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளியில் கலவரம் நடப்பதற்கு முன் அந்த பகுதியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கைதட்டி ஆக்ரோசமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும், அவர்களை சிலர் திட்டமிட்டு போராட்டத்திற்கு அழைத்து வந்ததாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை அங்கு அழைத்துவந்தது யார் என்பது பற்றியும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். கலவரக்காரர்களை அழைத்து வந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.