சிவகங்கை தொகுதியை இம்முறையும் கேட்கிறது காங்கிரஸ். ஆனால், ”காலங்காலமாய் காங்கிரஸுக்கே உழைத்துக் கெட்டது போதும் இம்முறை நாமே போட்டியிடுவோம்” என திமுகவும் இம்முறை சிவகங்கைக்கு மல்லுக்கட்டுகிறது. ப.சிதம்பரத்தின் மாவட்டம் என்பதால் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அந்தக் கட்சிக்கு வாடிக்கையாக கட்டம்போட்டு வைத்துவிடும் திமுக. ஆனால், இம்முறை அப்படி இல்லை. சிட்டிங் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் மீது உள்ள அதிருப்தியால், “இம்முறை சிவகங்கையில் உதயசூரியன் உதிக்க வேண்டும்” என்று உத்வேகம் காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்.
பெரும் பணம் செலவழித்து தேர்தலில் நிற்கும்படியான தலைகள் யாரும் சிவகங்கை திமுகவில் இல்லை. ஒருவேளை தொகுதி திமுகவுக்கு கிடைத்தால் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தனது மருமகளை நிறுத்தத் துணியலாம் என்கிறார்கள். அதேபோல் இந்தத் தொகுதிக்குள் திருமயம் சட்டமன்றத் தொகுதியும் வருவதால் அந்தத் தொகுதிக்காரரான அமைச்சர் ரகுபதி தனது மகனை நிறுத்த முற்படலாம் என்ற பேச்சும் ஓடுகிறது.
இவர்களுக்கு நடுவே இன்னொரு தலையும் உருள்கிறது. அதுதான் இயக்குநர் கரு.பழனியப்பன். இவருக்கு சொந்த ஊர் காரைக்குடி தான். அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக உதயநிதியின் உற்ற நண்பர்கள் வட்டத்துக்கு பழனியப்பனும் இப்போது இருக்கிறார். திமுகவுக்கு சிவகங்கையை ஒதுக்கினால் கரு.பழனியப்பனும் களத்துக்கு மோதலாம் என்கிறார்கள். இது எந்தளவுக்கு ஊர்ஜிதம் என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில், காரைக்குடியில் உள்ள தங்களது பூர்விக வீட்டில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் கரு.பழனியப்பன்.
உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது படங்கள் அந்த வீட்டுக்குள் மெகா சைஸில் பளிச்சிடுவதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து, சிவகங்கைக்கு நகரத்தார் (செட்டியார்) சமூகத்தைச் சேர்ந்த கரு.பழனியப்பன் தான் திமுக வேட்பாளர் என்ற பேச்சும் இப்போது சிவகங்கையை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.