மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பேசும் வீடியோவை வெளியிட்டு, அதில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பில் வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இன்று மாலை 6 மணிக்குப் பிறகு நேரடியாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் மிகத் தீவிரமாக கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், தாமரைக்கு ஆதரவாக வாக்கு கேட்டுள்ளது. அரசியல் கட்சியினரை திகைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், திமுக தலைவர் கருணாநிதி, “தேர்தல் நெருங்கி விட்டது. வீடு வீடாக செல், வாக்குகளை கேள். தெருத்தெருவாக அலைந்திடு, வீதி வீதியாக சென்றிடு, ஊரெல்லாம் சுற்றிடு, தமிழ்நாட்டை காப்பற்றிடு. இந்திய தாயகத்தை பாதுகாத்திடு அதற்காகவே..” என்று பேசியுள்ளார்.
கருணாநிதி அதற்காகவே என்று சொல்லி முடித்ததும் “தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்” என்று பின்னணிக் குரல் கேட்கிறது. இந்த வீடியோ தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் காமராஜர், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா ஆகியோர் பற்றி பாசிட்டிவாக பேசி தேர்தல் பிரச்சாரங்களில் வாக்கு சேகரித்து வந்தது பாஜக. இந்நிலையில், கருணாநிதி பேசிய பழைய வீடியோவை வைத்து தாமரைக்கு வாக்கு கேட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Read More : ’திமுக அந்த மாதிரி கட்சி’..!! ’நாம் தமிழர் கட்சியில் இணைந்தது ஏன்’..? பிக்பாஸ் அசீம் பரபரப்பு பேட்டி..!!