தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் ஜெய்ப்பூர் மண்டலத்தில் உள்ள இந்தரம் கிராமத்தைச் சேர்ந்த பெத்தபள்ளி கனகய்யா, பத்மா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் (24) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி மகேஷ் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே, இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் கடந்தாண்டு நஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணமான பிறகும் மகேஷ், இளம்பெண்ணை டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், திருமணத்திற்கு முன்பு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்கள் வைரலானதால் மனமுடைந்த இளம்பெண்ணின் கணவர், 6 மாதங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்து பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து மகேஷ் மற்றும் கனகய்யா குடும்பத்தினர் இடையே பகை அதிகரித்தது. இருப்பினும் மகேஷ் தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மகேஷ் மீது ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் புகாரளித்தனர். போலீசாரும் கவுன்சிலிங் வழங்கினர்.
இருப்பினும் மகேஷ் தனது முன்னாள் காதலிக்கு அடிக்கடி போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளார். இதனால் மகேஷை கொலை செய்ய இளம்பெண்ணின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை மகேஷ் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு இளம்பெண்ணின் வீட்டின் முன்பு சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து நிறுத்தினர். பின்னர் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து முதலில் கத்தியால் மகேஷ் கழுத்தை அறுத்தனர். பின்னர் அருகில் இருந்த கல்லால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். நடுரோட்டில் நடந்தாலும், சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்தார்களே தவிர யாரும் தடுக்கவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு, குற்றவாளிகள் போலீசாரிடம் சென்று சரணடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.