கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். விநாசம் என்றால் அழியக்கூடியது என்பது பொருளாகும். அதனுடன் அ சேர்க்கப்பட்டு அவிநாசி என அழைக்கப்படுவது அழியாத் தன்மை கொண்டது என பொருள்படுகிறது.
கோயிலின் அமைப்பு : இந்தக் கோயிலின் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளும் நிலையில் எதிரே அவரின் அவதாரமாக கருதப்படும் குரங்கு தலைகீழாக இறங்குவது போன்ற சிற்பம் உள்ளது. அதேபோல் அம்பாள் பெருங்கருணை நாயகி ஆட்சி பீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறார். அவிநாசி லிங்கேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இந்த கோயிலில் அருள் பாலிக்கிறார்.
அவிநாசியில் லிங்கேஸ்வரர் திருடனுக்கும் முக்தி கொடுத்துள்ளார் என்பதை விவரிக்கும் வகையில் பைரவர் சன்னதிக்கு அருகே வியாத வேடர் என்ற திருடனுக்கு தனி சன்னதியே உள்ளது. மேலும் இந்த கோயிலில் 32 விநாயகர் காட்சிகொடுக்கின்றனர். அதேபோல் ராஜகோபுரத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலமும், நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனம் இருப்பதற்கு பதில் சிம்ம வாகனம் இருப்பதும் ஆச்சரியம் கொள்ள வைக்கும்.
அவிநாசி லிங்கேஸ்வரர் பெருங்கருணை நாயகிக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடிமரமும் உள்ளது. அதேசமயம் சிவ ஆலயங்களில் சிவனுக்கு பின்புறமாக இருக்கும் விஷ்ணு இந்த தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனைப் பார்த்தபடி அருளுவது மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளுக்கு இடையே அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருள்பாலிப்பதால் இத்தலம் சோமாஸ் கந்தர் வடிவிலானது என சொல்லப்படுகிறது.
கோயில் சிறப்பு : இந்தக் கோயிலுக்கும் மைசூர் மகாராஜா வம்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என சொல்லப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மன்னராக வருபவர்கள் தங்களது பதவி ஏற்புக்கு பின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்து வந்து அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலில் வைத்து பூஜை செய்த பின்னரே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம்.
கோயிலின் தலவிருட்சமாக பாதிரி மரம் இருக்கும் நிலையில் இது பிரம்மோற்ச காலத்தில் மட்டும்தான் பூக்கும் தன்மையுடையது என்பது சிறப்பு வாய்ந்தது. அது மட்டுமல்லாமல் இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர் காசி தீர்த்தம் ஆகிய மூன்றும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டவை என சொல்லப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு அமாவாசை தோறும் இங்கிருக்கும் காசி கிணற்றில் நீராடி இறைவனை பக்தர்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
பெருங்கருணை நாயகியின் பின்புறம் உள்ள விருச்சிக அடையாளத்தை வழிபடும் விருச்சக ராசிக்காரர்களுக்கு நினைத்தது அனைத்தும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. காசியில் சென்று வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இந்த தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.