கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் இந்து ஜாகரணா வேதிகே அமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் சிறுபான்மையினருக்கு எதிராக தெரிவித்த கருத்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது,“லவ் ஜிஹாத்திற்கு எதிராக தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் “இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். ஆயுதம் இல்லை என்றால் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தியையாவது கூர்மையாக் வைத்துக்கொள்ளுங்கள். இந்து ஆர்வலர்களைக் கொல்ல அவர்கள் கத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர், எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள நமது கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும். நமது கத்தி காய்கறிகளை நன்றாக வெட்டினால், அது நம் எதிரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிரக்யா தாகூருக்கு எதிராக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. பிரக்யா சிங்கின் பேச்சு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வெளிப்படையான அழைப்பு என்று அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பொனவல்லா இந்த புகாரை அளித்துள்ளார். சிவமொக்கா எஸ்பி ஜி.கே.மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகாரின் நகல் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் பிரக்யா தாகூர் மீது, ஐபிசி பிரிவுகள் 153-ஏ, மதங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், 153-பி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான கூற்றுகள், 295-ஏ ஆகியவற்றின் கீழ் மதத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.