கோடை வெயிலை சமாளிக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் உதவும், நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைகால பானங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரின் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, அதிகபட்ச நீரேற்றத்திற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கோடையில் எலுமிச்சை சாற்றை குடிக்க விரும்பாத மக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு எல்லா மக்களும் விரும்பி சாப்பிடும் பானம் எலுமிச்சை ஜூஸ். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இந்த பானத்தில் சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேறுசில ஆரோக்கியமான பொருட்களைச் சேர்த்து அருந்தலாம். எலுமிச்சை நீரிழிவு நோய்க்கு ஏற்றது மற்றும் இரத்த சர்க்கரையை எதிர்மறையாக பாதிக்காது.
பழச்சாறுகளில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே, காய்கறி சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை ஒன்றாக சேர்த்து, காய்கறி கலவையை நீங்களே தயார் செய்யலாம். அதேநேரம் உங்கள் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி சாற்றின் சுவையை அதிகரிக்க சில அளவு பழங்களை நீங்கள் சேர்க்கிறீர்கள் என்றால், அதன் அளவைக் கவனியுங்கள்.
தேங்காய் தண்ணீர் உங்களை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் மிகக் குறைவாக உள்ளது. தேங்காய் நீரில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் தேங்காய்த் தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால் அவர்களின் உணவில் பாதுகாப்பாக சேர்க்கக்கூடிய சரியான அளவை தெரிந்துகொள்ள ஒரு சுகாதார நிபுணரை அணுகலாம்.
அனைத்து மக்களாலும் மிகவும் விரும்பி குடிக்கப்படும் பானம் மோர். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் சிறந்த புரோபயாடிக் ஆகும். மோர் குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த பானமாகும்.