கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கமளச்சேரியில் நேற்று கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், 3 முறை குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார்.
முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், பிரார்த்தனை கூட்டதை ஏற்பாடு செய்த Jehovah Witnesses group தேசவிரோதிகள் எனவும் அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) இந்த விசாரணையை நடத்த உள்ளது. மேலும் கேரள அரசும் 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் விசாரணைக்காக அமைத்துள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக நாட்டையே அதிரவைத்துள்ளது. இதற்கிடையே, கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதள்ப் பக்கங்களில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘காங்கிரஸ்- சிபிஎம் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல்தான் இத்தனைக்கும் காரணம்’ எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
கேரளாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டன. கேரளாவில் தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த பேரணி ஒன்றில் ஹமாஸ் அமைப்பின் சர்வதேச தலைவரான காலிம் மஷால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றியதை தொடர்ந்து இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்களின் இந்த விமர்சனங்கள்ளுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க இந்தக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் கூட்டியுள்ளார்.