தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை நடுக்கல்லூரி, கோடக்நல்லூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்பட்டன. இது தொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், பேட்டையைச் சேர்நத மாயாண்டி, ஓமலூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லதுரை, கேரள கழிவு மேலாண்மை அலுவலர் நிதிஷ் ஜார்ஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனே அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருவனந்தபுரம் சார் ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத்துறை அலுவலர் கோபகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நெல்லை வந்து ஆய்வு செய்தனர்.
கேரளாவில் மருத்துவக் கழிவை அகற்றும் 3 நிறுவனங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது ஏன்..? என்றும் மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை இன்றைக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. நெல்லையில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக வாதம் முன் வைக்கப்பட்டது. மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக் கழிவு பொருட்கள் உள்ளிட்டவை மூட்டை மூட்டைகாக கட்டப்பட்டு வீசிவிடுவார்கள்.
இதற்கிடையே, 6 டன் கேரள மருத்துவக் கழிவுகளை திடியூரில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.