வாடகைக்கு வீடு தேடுவது எந்த அளவுக்கு சிரமமான வேலை என்பதை விட அதனால் சந்திக்கும் சில சமூகம் சார்ந்த இடர்பாடுகளே வேதனைக்குரியதாக இருக்கும். குறிப்பாக, இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் திருமணமாகாதவர், திருமணமானவர் என எவருக்குமே வாடகை வீடு தேடிய சமயங்களிலேயே கிடைப்பதெல்லாம் அரிதிலும் அரிதாகவே இருக்கும். வீட்டு வாடகை கட்டுவதற்காகவே கூடுதலாக சம்பளம் கிடைக்கும் இடத்துக்கு பணிமாற வேண்டுமோ என்ற அளவுக்கெல்லாம் சிந்திக்க வைத்துவிடுகிறது வீட்டு உரிமையாளர்களின் கெடுபிடிகள். குறிப்பாக வாடகைக்கு செல்லும் முன்பு அட்வான்ஸாக கேட்கப்படும் தொகைதான் மலையளவுக்கு இருக்கும்.
தற்போது வைரலாகியிருக்கும் பதிவில் இருக்கும் போஸ்டர் ஒன்றில் வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் தொகையை கட்ட தனது இடப்புற சிறுநீரகத்தையே விற்க முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு பெங்களூருவில் தான் நடந்திருக்கிறது. இது தொடர்பாக பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “இடது கிட்னி விற்பனைக்கு.. வீட்டு உரிமையாளரிடம் செக்யூரிட்டு டெபாசிட் கட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறது” என பெரிய எழுத்துகளில் அச்சிட்டுவிட்டு, அதற்கு கீழே, “கிண்டலுக்காக சொன்னேன். ஆனால் எனக்கு இந்திரா நகரில் வீடு தேவைப்படுகிறது. என் ப்ரோஃபைலை காண QR code-ஐ ஸ்கேன் செய்து பாருங்கள்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் போட்டோவை ரம்யா என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்து, “இது பீக் பெங்களூருக்கானதா?” என்று கேப்ஷன் இட்டிருக்கிறார், இதற்கு பலரும் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்கள்.