தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளைத் தரம் பார்த்து வாங்குவது எப்படி..? என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”முதலில் அதிக அடர்த்தியான நிறங்கள் கொண்ட பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதை வாங்கி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். பயன்படுத்தும் எண்ணெய் சரியாக இருக்கிறதா? நெய் சரியாக உள்ளதா? எனப் பார்த்து வாங்க வேண்டும்.
பலர் நெய்யில் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால், வனஸ்பதியில் செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் நிறையப் பலகாரங்களைச் செய்வார்கள். மீந்து போன எண்ணெய்யை மறுநாள் பயன்படுத்துவார்கள். புதிய எண்ணெய்யை மாற்றமாட்டார்கள். நாங்கள் ஒரு கடை பரிசோதனை செய்யச் சென்றால், முதலில் அதன் நிறத்தைத்தான் பார்ப்போம். அதைவைத்தே அதன் தரம் எப்படி என்பது பற்றிய ஒரு முடிவை எடுத்துவிடலாம்.
உதாரணமாகச் சிலர் லட்டு வாங்குவார்கள். அது சிகப்பு நிறத்தில் இருக்கும். அப்படியான லட்டினை வாங்கவேக் கூடாது. சிலர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சாதாரண விஷயம் என எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஆபத்துதான். மஞ்சள் நிறமாகத் தெரியவும் செயற்கையாக நிறம் சேர்க்கிறார்கள். இரண்டும் ஆபத்துதான். சாதாரண லட்டுகளை வாங்கலாம். நிறம் முகத்தில் அடிப்பது போல் இருந்தாலே அதைத் தவிர்க்க வேண்டும்.
சில கடைகளில் மில்க் ஸ்வீட்ஸ் பண்டங்களில் நீலம், ஸ்கை ப்ளூ, பச்சை கலர், ஆரெஞ்ச் என விதவிதமான கலர்களை மேலே ஒரு லேயராக பயன்படுத்தி இருப்பார்கள். அதை சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சனைகள் வரக்கூடும். கட்டாயம் இவற்றைக் குழந்தைகளுக்குத் தரக்கூடாது. மிக்சரில் பச்சை நிறம் உள்ள பட்டாணியைப் சேர்த்திருப்பார்கள். அது உண்மையான பச்சைப் பட்டாணி கிடையாது. ரசாயனம் கலந்த பட்டாணி. முறுக்கு, ஜிலேபி, ஜாங்ரி வகைகளில் கூட சிவப்பு ரசாயன வண்ணத்தை சேர்ப்பார்கள். கலர் இல்லாத சாதாரண முறுக்கை வாங்க வேண்டும்.
அதேபோல் இனிப்பு வகைகள் மீது சிலர் பேப்பர் போல ஜொலிக்கும் ஒருவகை பேப்பரை ஒட்டி தருவார்கள். அதன் அளவு குறைவாக இருந்தால் தவறில்லை. ஆனால், அதை தொட்டுப் பார்க்கும் போது கையில் அந்த சில்வர் பேப்பர் ஒட்டும் அளவுக்கு இருந்தால், அது ஆபத்து. அதை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கவே கூடாது. இந்த அலுமினிய போன்ற கலவைகள் வயிற்றுக்குக் கெடுதல் தரும். அதிகம் உட்கொள்வதால் கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
Read More : தீபாவளி பண்டிகை..!! அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நாளை அரை நாள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!