fbpx

40 வயசுதானா?… விடை தெரியாத கிம் ஜாங் உன்னின் ரகசியங்கள்?… சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அதிபர்!… ஏன் இத்தனை ரகசியங்கள்!

கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

வடகொரிய அதிபராக கிம் ஜோங் உன் தலைமையேற்று 13 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஏவுகணை சோதனைகள் மூலம் ராணுவ பலத்தைப் பறைசாற்றியது முதல் வறட்சியின் பிடியில் தவித்த மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய சூழலுக்கு ஆளானதுவரை இவரது ஆட்சிக் காலத்தில் சொல்லப்பட வேண்டிய சரித்திரமும், வெளிவராத வரலாறும் ஏராளம்.

வடகொரிய முன்னாள் அதிபரும், கிம் தந்தையுமான கிம் ஜோங் இல், 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, வடகொரியாவின் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரமும் 28 வயதான கிம்மின் தலைமையின் கீழ் வந்தது. ஆரம்பத்தில் கிம் இந்த பெரும் பொறுப்பை இந்த இளம் வயதில் எப்படி கையாளப்போகிறார் என்றே பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனால், நடந்தது வேறு. வடகொரியா தனது உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும் தன்மை கொண்ட நாடு. கிம்மின் ஆட்சியில் இது பல மடங்கு அதிகரித்தது.

வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள முடியாத வண்ணம் இரும்புத் திரையை வடகொரியாவை சுற்றிலும் கிம் ஏற்படுத்தினார். மேலும், தன்னைப் பற்றி புரிந்து கொள்ளப்படாத பிம்பத்தையும் கிம் இந்த 13 ஆண்டுகளில் வடிவமைத்துக் கொண்டார். இதன் காரணமாக உலகின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கிம் தன்னை தற்போது நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் 40 வயதை எட்டுகிறார். ஆனால், அது உண்மையா? அவரது பிறந்தநாள் ஜனவரி 8 என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது சரியான பிறந்தநாள் பற்றி ஒருமித்த கருத்து இல்லை. கிம் பற்றிய மர்மம் இது மட்டுமல்ல. 2011-ல் அதிகாரத்துக்கு வந்த வட கொரிய சர்வாதிகாரி பற்றிய விடை தெரியாத ஐந்து மர்மமான கேள்விகள் இங்கே உள்ளன.

அவர் பிறந்த ஆண்டு 1982, 1983 அல்லது 1984 என பல சர்ச்சைகள் உள்ளன,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரசியல் பாடப் ஆசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹோவெல் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜனவரி 8 என்று கூறப்படும் அவரது பிறந்தநாள் கம்யூனிச நாட்டில் ஒரு வழக்கமான வேலை நாளாகும். அதே நேரத்தில் அவரது தந்தை கிம் ஜாங் இலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 ஆம் தேதி “பிரகாசமான நட்சத்திரத்தின் நாள்” என்று கொண்டாடப்படுகிறது. அவரது தாத்தா கிம் இல் சூங் -ன் பிறந்த நாளான ஏப்ரல் 15-ம் தேதி “சூரிய நாள்” என்று கொண்டாடப்படுகிறது. எவ்வாறிருந்தாலும், அவரது குடும்பத்தின் பல விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன.

வட கொரிய நிபுணர் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உனுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் பெயர் கிம் ஜாங் நாம் என்கிறார். அவர் 2017 -ல் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். கிம் ஜாங் உனின் தந்தை கிம் ஜாங் இலுக்கு குறைந்தது நான்கு வாழ்க்கை துணைகள் இருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அவரது உறவுகள் பெரும்பாலும் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன. அவரது தாய், கோ யங் ஹூய், ஜப்பானில் பிறந்ததாகவும், 1960களில் நடனம் ஆடுபவராக வேலை செய்ய வட கொரியாவுக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது.

1973ல் ஜப்பானுக்கு சென்றபோது கோ யங் ஹூய் எடுத்த புகைப்படங்கள் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டன. கோ ஹூய் நடனக் கலைஞராக இருந்ததாலும் ஜப்பானுடன் தொடர்புடைய குடும்ப பின்னணி இருந்ததாலும் வட கொரியா அவரைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்யவில்லை என்று கொரியா டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.

இதேபோல் கிம்மிற்கு ரி சோல் ஜு என்ற மனைவி இருப்பதாகத் தெரியும். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை (2009 இல் இது நடந்திருக்கலாம் என்ற ஊகம் உள்ளது). “தோழர் ரி சோல் ஜு” பற்றி மிகக் குறைவே தெரியும். அவர் முன்னாள் பாடகியாக இருந்து, ஒரு நிகழ்ச்சியின் போது கிம்மின் கவனத்தை ஈர்த்தாரா? அவரது பெயரில் வட கொரிய கலைஞர் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே நபர் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒரு சட்டமன்ற உறுப்பினர், புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 2005-ம் ஆண்டு ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான வட கொரியாவின் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் குழுவில் (cheer leaders) பங்கேற்க சோல் ஜு தென் கொரியாவுக்குச் சென்றதாகவும், சீனாவில் பாடல் பயின்றதாகவும் நம்புவதாகக் கூறினார். கிம் ஜாங் உனின் மனைவி என்பதை தவிர, வேறு எந்த விவரங்களையும் வட கொரியா கொடுக்கவில்லை.

2016 -ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்த பிறகு ரி சோல் ஜு கர்ப்பமாக இருப்பதாக ஊகம் எழுந்தது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கெனவே, 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அதில், வாரிசாக இருப்பதற்கான சாத்தியம் கொண்ட, ஆண் குழந்தை பிறந்ததா என்று தெரியவில்லை. சொல்லப் போனால், அந்த குழந்தைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.

வட கொரிய தலைவர் தனது மகள் கிம் ஜூ-ஆவுடன் பொது மக்கள் முன்பு தோன்றியுள்ளார். இரண்டாவது மூத்த குழந்தையான அவருக்கு 10 வயதாகிறது. அதிக தகவல்கள் தெரிந்திருப்பதும் அவரைப் பற்றி தான். அவர் 2023-ல் குறைந்தது ஐந்து முறை பொது நிகழ்வுகளில் தோன்றியுள்ளார். “அவரது குழந்தைகளின் முழு கதையையும் நாம் இன்னும் அறியவில்லை,” என்று டாக்டர் ஹோவெல் விளக்குகிறார்.

Kokila

Next Post

இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறதா...?

Sun Jan 7 , 2024
23 டிசம்பர் 2023 தேதியிட்ட தி எகனாமிஸ்ட், இதழில், “இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ கட்டமைப்பு போதுமான பயணிகளை ஈர்க்கத் தவறிவிட்டது” என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செயதி, தவறான தகவல்களை வழங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாட்டில் உள்ள மெட்ரோ அமைப்புகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒன்றே […]

You May Like