கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான நிதிஷ் ராணாவின் மனைவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நிதிஷ் ராணா மனைவி சாச்சி மார்வாவுக்கு கீர்த்தி நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு இந்த தொந்தரவு நடந்துள்ளது. அவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் படேல் நகரைச் சேர்ந்த விவேக் மற்றும் பாண்டவ் நகரைச் சேர்ந்த சைத்தன்யா சிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு சாச்சி மார்வா அவரது காரில் வடக்கு டெல்லி மாடல் டவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் ட்ராபிக் சிக்னல் அருகே சாச்சியை அடையாளம் கண்டு பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் அவரது காரை வேகமாக துரத்தி காரின் முன் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் காரை நிறுத்தி அதன் கண்ணாடியில் ஓங்கி அடித்து அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பின்னர் சாச்சி மார்வா மேற்கு டெல்லி காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. நிதிஷ் ராணாவும் இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. முன்னதாக வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை அவர் உறுதி செய்தார்.