இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். கடைசி வரை போராடிய அவர் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது இந்திய அணி. பங்களாதேஷ் அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும் ,எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்த பங்களாதேஷ் அணியின் கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். பரபரப்பாக சென்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. பங்களாதேஷ் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மிஹிடி ஹசன் மிர்சா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் வேகமாக ஓடி சென்று கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது தவறவிட்டார். கேட்ச்சை தவறவிட்டதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஹசன் மிர்சா – ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 50 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பங்களாதேஷ்க்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மீதும் கேட்ச்சை தவறவிட்ட கேஎல் ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.