கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி 1500 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் சிபிசிஐடி காவல்துறையினர் கேரள மாநிலத்திலும் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வாளையாறு மனோஜ், 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சந்தோஷ் சாமி உள்ளிட்டோரின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாளையார் மனோஜ் அணிந்திருந்த ஆடையில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகின்ற நிலையில், கேரள மாநிலத்தில் திருச்சூர், நந்திக்கரா பகுதியில் இருக்கின்ற மனோஜ் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
அதோடு இந்த கொள்ளை கும்பல் காரை வாடகைக்கு எடுத்ததாக சொல்லப்படும் மலப்புறத்தில் இருக்கின்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.