India vs Pakistan: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்படி, முதல் 4 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 8.2 ஓவரில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 9-ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக் ரன் அவுட் முறையில் ஆட்ட இழந்தார். அவர் 26 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 52 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சிற்கு பதிலடி கொடுக்க முடியாமல், பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இதனால், 22 ஓவர்கள் முடிவில் அந்த அணி 86 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 46 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்னிங்ஸின் கடைசி 2 பந்துகளுக்கு இருக்கும் நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, 241 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வீரர்கள், ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகின் அப்ரிதி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ரோஹித் சர்மா விக்கெட் விழுந்ததற்கு பின்னர் விராட் கோலியும், சுப்மன் கில்லும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 52 பந்துகளில் 7 பவுண்டரியுடன் சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அப்ரார் அகமது வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.
இதையடுத்து, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரது பார்ட்னர்ஷிப் 100 ரன்களை தாண்டியது. இதையடுத்து, கடைசி வரை அவுட் ஆகாமல் நின்ற விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் 51வது சதம் இதுவாகும். இதன்மூலம் அதிவேக 14000 ரன்கள் அடித்த ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். 42.3 ஓவர்களில் 244 எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள், ஹர்திக் 8, அக்சர் படேல் 3 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே வங்காளதேசத்தை தோற்கடித்திருந்த இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட எட்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். இதன் மூலம் பாகிஸ்தானின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.
தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், “டாஸ் ஜெயித்தும் எந்த அனுகூலமும் கிடைக்கவில்லை. 280 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் வெகுவாக கட்டுப்படுத்தினர். நாங்களும் மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்ததால் 242 ரன்னுக்குள் அடங்கிப்போனோம். இந்த ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்து விட்டோம். பீல்டிங்கில் கண்டிப்பாக முன்னேற்றம் காண வேண்டும். கோலி- கில் ஜோடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டது” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “தொடக்கத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் சூப்பர். அவர்களை இவ்வளவு குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியது பந்து வீச்சாளர்களின் கூட்டு முயற்சியாகும். நாட்டுக்காக விளையாடுவதை மிகவும் நேசிக்கூடியவர் கோலி. தனது சிறந்த முயற்சியை எப்போதும் வெளிப்படுத்துவார். அதைத் தான் இன்றும் செய்துள்ளார். அவர் இவ்வாறு ஆடியதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை” என்று அவர் கூறினார்.