ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உலகின் விலையுயர்ந்த ராமாயண புத்தகம் அயோத்தியை சென்றடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 1.65 லட்சம் ஆகும்.
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, ராமர் கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பரிசுப்பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதுமட்டுமல்லாமல், நன்கொடைகளும் கோடிக்கணக்கில் வழங்கப்பட்டுவருகிறது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கும்பாபிஷேக விழாவில் கலந்துகொளவதற்காக பல்வேறு விஐபிகள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்துகொள்வார். எனவே கூட்டம் அலைமோதும் என்பதால், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்காமல் இருக்க அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில், ராமரின் பெயர் உலகெங்கிலும் எதிரொலிக்கிறது, அதன் ஒருபகுதியாக வால்மீகி எழுதிய சமஸ்கிருத காவியமான ராமாயணம், உலகின் மிக விலையுயர்ந்த ராமாயணமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான உலகின் விலையுயர்ந்த ராமாயணம் அயோத்தியை சென்றடைந்துள்ளது. இந்த ராமாயணத்தில் பல சிறப்புகள் உள்ளன. எனவே, அனைத்து ராம பக்தர்களையும் ஈர்க்கும் மையமாக இது மாறியுள்ளது.
அதாவது, இந்த ராமாயணத்தில் மூன்று பெட்டிகள் உள்ளன, ராமர் கோவிலின் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் 3 தளங்கள் இருப்பது போல், இதுவும் மூன்று தளங்கள் கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய புத்தக விற்பனையாளரான மனோஜ் சதி, பெட்டிக்கு அமெரிக்க வால்நட் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்திற்கான மை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஆர்கானிக் மை என்று கூறினார்.
இந்த புத்தகத்திற்கான காகிதம் பிரான்சில் தயாரிக்கப்பட்டது, “இது அமிலம் இல்லாத காகிதம். இது காப்புரிமை பெற்ற காகிதம். இந்த காகிதம் இந்த புத்தகத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். இது சந்தையில் எங்கும் கிடைக்காது” என்றார். 400 ஆண்டுகள் நீடிக்கும் இந்த புத்தகத்தை நான்கு தலைமுறையினரும் படிக்க முடியும் என்று மனோஜ் சதி குறிப்பிட்டுள்ளார்.