fbpx

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம் இன்று!… மறக்கமுடியாத துயரம்!… கடந்து வந்த பாதை!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் பள்ளியில் எந்த பாவமும் அறியாத 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி சாம்பல் ஆனார்கள்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. 2004 இல் இந்த மூன்று பள்ளிகளிலும் சேர்த்து மொத்தமாய் 782 குழந்தைகள் படித்து வந்தார்கள். இந்த பள்ளி வளாகம் குடியிருப்பு பகுதியில் இருந்ததால் மிகுந்த இட நெருக்கடி உள்ள இடமாக அது இருந்திருக்கிறது.

பள்ளியின் வகுப்பறைகள் சரியான காற்றோட்ட வசதி இல்லாமலும், வகுப்பறைகளுக்கு செல்லும் மாடிப்படிகள் மிக குறுகியதாகவும் குழந்தைகள் எளிதாக ஏறி இறங்க முடியாத வகையிலும் இருந்தன. வகுப்பறைகள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் ஒரு நீண்ட அறைக்குள் பல வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் அடுத்தடுத்து அமர வைக்கப்பட்டிருந்தனர் என்பது இந்தச் சம்பவத்தில் மிகக் கொடுமையான விஷயம். வகுப்பறைக்கு மிக அருகில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை தயாரிக்கும் சமையல் கூடமும் இருந்து வந்தது.

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அந்த பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கிக் கொண்டு இருந்தன. அன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிக்கு சற்று தொலைவில் இருக்கும் ஒரு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதனை கேள்விப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அதன் காரணமாக, தாங்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் வகுப்பறையின் கதவுகளை குழந்தைகள் வெளியில் வர முடியாதபடி நன்றாகப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளில் இருந்த அந்த குழந்தைகள் பூட்டிய வகுப்பறைக்குள் அடுத்து நடக்கப் போகும் பயங்கரத்தை அறியாதவர்களாய் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் மாடிகளில் இயங்கி வந்த அந்த வகுப்பறைக்கு நேர் கீழே இருந்த சமையல் அறையில் ‘திகு திகுவென’ தீ பற்றி எரியத் துவங்கியது. அங்கு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சமையல்காரர் வசந்தி, அப்போது அருகில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்று இருந்ததால் நெருப்பை அணைக்கவோ அல்லது அதைக் கட்டுப்படுத்தவோ யாரும் இல்லாத சூழலில் கட்டுப்பாடற்று எரிந்த தீ, எல்லா பக்கங்களிலும் பரவி மேல் மாடியில் பூட்டப்பட்ட வகுப்பறை வரை பற்றி எரிந்தது.

பூட்டப்பட்ட அந்த வகுப்பறையின் மேற்கூரை ஓலை கூரைகளால் வேயப்பட்டிருந்ததால் கீழே எரிந்த தீ மிக வேகமாக மேலே பரவியது. தீ எரிவதை பார்த்த ஒரு மாணவி அதை தன் வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் சொல்ல, அந்த ஆசிரியை உடனே எல்லோருக்கும் தகவல் சொல்லி குழந்தைகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அதற்குள் கடுமையாக பரவிய தீயால், பள்ளிக் கட்டடம் முழுவதும் கரும் புகை பரவியது. இதனால், வகுப்பறைகளில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் எப்படி எந்த வழியில் வெளியேறுவது என்று தெரியாமல் தடுமாறினார்கள்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அவ்வளவு பெரிய தீயை கட்டுப்படுத்தும் வசதிகள் அப்போது அவர்களிடம் இல்லாததால் தீயை அணைப்பது அவர்களுக்கு கடும் சவாலாக இருந்திருக்கிறது. எப்படியோ ஒருவழியாக அந்த தீயை அணைத்து முடித்த பிறகுதான், பள்ளியின் இரண்டாவது மாடியில் ஓலையால் வேயப்பட்ட, பூட்டிய வகுப்பறைகளுக்குள் சிக்கிக்கொண்ட அத்தனை குழந்தைகள் வெளியில் வர முடியாமல், பற்றி எரிந்த அந்த தீயின் கோரத் தாண்டவத்தில் ஒரு குழந்தை கூட உயிர் தப்பாமல் கருகி சாம்பலாகி நெருப்புக்கு இரையாகினர் எனும் நெஞ்சை வெடிக்கச் செய்யும் செய்தி எல்லோருக்கும் தெரிய வந்தது.

‘நாங்கள் எஞ்சினியர்கள் ஆக போகிறோம்… நாங்கள் டாக்டர்கள் ஆகப் போகிறோம்’ என்கிற ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு காலையில் பள்ளிக்கு கிளம்பிய அந்த பிஞ்சு மலர்கள், அந்த பெரும் தீயின் கொடும் நாவுகளுக்கு இரையாகி கரிக்கட்டைகளாக கிடந்தது இந்த உலகில் வேறெங்கும் நடக்காத கொடுமையாக காண்பவர்களின் நெஞ்சை கலங்கச் செய்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் நாள் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த அந்த பெற்றோர்கள் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அந்த பள்ளியின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இறந்து போன அந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களின் முன்பாக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதை தற்போது வரை வழக்கமாக செய்து வருகின்றனர். விபத்து ஏற்பட்ட 18ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து நினைவு நாளின் போது நினைவு சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படுவதோடு குழந்தைகளின் நினைவாக ஊர்வரம் நடத்தப்படுகிறது. மேலும் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு விருப்பமான உணவு வகைகளை படைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று 19ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Kokila

Next Post

12 வயது சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை!

Sun Jul 16 , 2023
நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி மறுவாழ்வு அளித்து இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஒரு அற்புதமான மருத்துவ சாதனையில், இஸ்ரேலிய மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது, 12 வயது சுலைமான் எனும் அரேபிய சிறுவனுக்கு 12 மணி நேர அறிவை சிகிச்சை செய்து, மீண்டும் தலையை உடலுடன் பொருத்தி உயிரை காப்பாற்றி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சுலைமான் ஹாசன் என்ற […]

You May Like