”நாடாளுமன்றத்தில் அமைதியாக இல்லாவிட்டால் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி மிரட்டல் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அவசர சிறப்பு சட்ட மசோதாவை ஆதரித்து பாஜக எம்.பி.யும், காலாச்சாரத்துறை இணை அமைச்சருமான மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்பி-க்கள் மசோதாவை எதிர்த்து முழக்கமிட்டனர். இதனால் கோபமடைந்த மீனாட்சி லேகி, அமைதியாக இருங்கள்.. இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என பகிரங்கமாக எச்சரித்தார்.
மீனாட்சி லேகியின் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். மக்களவையின் பொறுப்பு சபாநாயகர் ராஜேந்திர ஹார்வாலும் லேகியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வேடிக்கையாகவே அவ்வாறு கூறியதாகவே லேகி விளக்கமளித்தார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வரும் நிலையில், வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என்று மக்களவையிலேயே பாஜக பெண் அமைச்சர் மிரட்டும் வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.