தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது.
நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்னும் தீபாவளிக்கு 3 நாட்களே இருப்பதால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு 90% நிறைவடைந்துவிட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் தொடங்கப்பட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.