கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், தொடங்கப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இது பெரும்பாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு இரண்டு முறைகளில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஒன்று வங்கிக் கணக்கு அடிப்படையிலும், மற்றொன்று ஆதார் கணக்கு அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
அதில், 2023 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனாலும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கால வரம்பு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில், இன்றே(ஆகஸ்ட் 31) கடைசி தேதியாகும். அப்படி செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கால அவகாசம் நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதால் இன்றே கடைசி தினமாக கருதப்படுகிறது. இதுவாரை வங்கி எண்ணுடன் ஆதாரை இன்னைக்காதவர்கள் உடனே இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.