fbpx

காலிமனை பதிவுசெய்யும்போது நிலத்தின் சமீபத்திய புகைப்படம் கட்டாயம்!… புதிய நடைமுறையை அறிவித்தது பதிவுத்துறை!

காலி மனை தொடர்பான பத்திரங்களில், அந்த நிலத்தின் சமீபத்திய தேதியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்ய, கள ஆய்வு மேற்கொள்வதில்லை. சில இடங்களில், காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களில், கட்டடங்கள் மறைக்கப்படுவதால், பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டடம் குறித்த தகவல்களை ஆவணங்களில் குறிப்பிடாமல் அதனை காலிமனையிடமாகவே பதியும் நிலை தொடர்வதாக புகார்கள் வருகின்றன. இது அரசுக்கு வரும் வருவாயை பாதிப்பதாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய அறிவுரை சார்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காலிமனை என குறிப்பிட்டு பதிவுக்கு வரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஸ்தாப இடத்தினை பதிவுக்கு முன்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். மேலும், இப்புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை 16.08.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. காலிமனை என பதியப்படும் ஆவணங்கள் தொடர்பாக இந்த அறிவுரையைப் பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்திரத்தில் கட்டடம் தொடர்பான விபரங்களை மறைப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட நிலத்தை எளிதில் அறியும் வகையில், புவியிட தகவல்கள் மற்றும் தேதியுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ஆவணத்தில் இணைக்க வேண்டும். இதை அனைத்து ஆவணதாரர்களும், ஆவணம் எழுதுவோரும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனை பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, முந்தைய ஆவணங்களில், கதவு எண், மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு எண், சொத்து வரி எண் குறிப்பிடப்பட்டு இருந்தால், கள ஆய்வு மேற்கொள்வது கட்டாயம். முந்தைய ஆவணங்களில் வீட்டுக் கடனுக்காக ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவாகி இருந்தாலும், கள ஆய்வு கட்டாயம்.

முந்தைய ஆவணத்தில் வீடு இருப்பது குறிப்பிடப்பட்டு, அது தற்போது இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அங்கு கள ஆய்வு செய்வது கட்டாயம். சம்பந்தப்பட்ட நிலத்தின் புவியிட தகவல்கள், தேதியுடன் புகைப்படம் எடுத்து, களப்பணி அறிக்கையில் இணைக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல், கட்டடம் இருக்கும் இடத்தை காலி மனையாக பதிவு செய்யும் அலுவலர்கள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரங்கள் தொடர்பான தணிக்கையிலும், இந்த விதிகள்கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என, பார்க்க வேண்டும். பொது மக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களுக்கு, இதை பதிவு அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

Kokila

Next Post

சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்…..! கணவன் செய்த கொடூர செயல்…..!

Fri Aug 11 , 2023
70,000 ரூபாய் கொடுத்து திருமணம் செய்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, டெல்லி பதேபூர் பெரி என்ற பகுதியில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, […]

You May Like