மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேச்சைத் தொடங்கினார். அதேநேரம் அவர் தனது பேச்சில் அதிகமாக திமுகவையே விமர்சித்தார். செல்லூர் ராஜூ பேசுகையில், “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள்.
மற்றொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன.
நிலைமை இப்படி இருக்கும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கும். திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதியில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என்று ஆவேசமாகப் பேசினார்.