குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் துணி துவைக்கும் சலவை தூள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 200-க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 97 நிறுவனங்களில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற நிலையில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தயார் செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சில உற்பத்தி நிறுவனங்கள் ஐஸ்கிரீமில் கிரீம்களை உருவாக்க துணி துவைக்கும் சலவை தூளையும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க பாஸ்போரிக் அமிலத்தையும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செலவை குறைப்பதற்காக யூரியா உள்ளிட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட செயற்கை பாலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சர்க்கரைக்கு பதிலாக சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்த சாக்ரின் மற்றும் சாயக் கலவைகளையும் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல உற்பத்தியாளர்கள் குடிக்க தகுதியற்ற தண்ணீரை ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஐஸ்கிரீமை உட்கொள்ளும்போது தொண்டை, உணவுக் குழாய், வயிற்றில் காயங்கள் ஏற்படும் என்றும், இருமல், சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைப்போல பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படும் குளிர்பானங்களால் எலும்பு வலுவிழக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.