ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து, சொலிசிட்டர் ஜெனரல், LGBTQIA-உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு சட்டங்களில் 160 க்கும் மேற்பட்ட விதிகள் இருப்பதாகவும், அவை நீதிமன்றங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது
இதையடுத்து, இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விஷயத்தை முடிவு செய்ய வேண்டாம் என்றும், “சிக்கலான சமூக, தார்மீக பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு விட்டுவிடுங்கள்” என்றும் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. மேலும், இதில் உள்ள சிக்கலான தன்மை மற்றும் சமூக மாற்றங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
தன்பாலின திருமணங்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் உள்ளிட்ட தரப்புகளிடம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது. ஆண், பெண் திருமணம் என்றாலும் வயது வரம்பு, பல தார மணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. எனவே இத்தகைய விவகாரங்களில் நாடாளுமன்றத்தின் வழியாகவே மாற்றங்களை செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது ஆண், பெண் திருமணங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறிய மத்திய அரசு, LGBTQIA-ல் உள்ள 72 வகையான வெவ்வேறு பாலியல் உறவுகளை எப்படி நீதிமன்றம் ஒழுங்கப்படுத்த முடியும் என கேள்வியெழுப்பியது. எனவே தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என மத்திய அரசு வாதிட்டது.