இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 1960-களில் நக்சல் பிரச்சனை ஏற்பட்டபோது இந்த பாதுகாப்பு முறைகள் தொடங்கப்பட்டன. புலனாய்வுத்துறை ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பிட்டு, அதுபற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப X, Y, Y+, Z, Z+ மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) என 6 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, உச்சபட்ச பாதுகாப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மெய்க்காப்பாளர்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு 5 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அதில் முதற்கட்டமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் 10-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள் உள்ளிட்ட 36 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதனைத் தொடர்ந்து, இசட் பிரிவில் மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த 4 முதல் 6 வீரர்கள் உள்பட 22 வீரர்கள் இருப்பார்கள். ஒய் பிளஸ் பாதுகாப்பு என்பது 2 முதல் 4 கமாண்டோக்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் இருப்பார்கள். ஒய் பிரிவில் ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்கள் உள்பட 8 பேர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். இந்தப் பாதுகாப்புக்கு மாதம் ரூ.12 லட்சம் செலவிடப்படுகிறது.
விஐபி-க்களுக்கான இறுதிக்கட்ட பாதுகாப்பாக எக்ஸ் பிரிவு உள்ளது. இதில், துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் இருப்பார்கள். இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 51 பேருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், பாபா ராம்தேவ், அமிர் கான் உள்ளிட்ட 68 பேருக்கு இசட் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எக்ஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மட்டுமே இருப்பார்கள் என்றும், மாநில போலீசார் இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.