ஆரம்பத்தில் சினிமாவில் அதிக நிராகரிப்புகளை சந்தித்ததாகவும் இப்போது பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல் தான் காரணம் எனவும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து பிரேக் எடுத்தது மற்றும் இங்கு ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த நிராகரிப்புகள் பற்றியும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பல காரணங்களுக்காக நான் திரையுலகில் நிராகரிப்பைப் பார்த்திருக்கிறேன். அந்த பாத்திரத்திற்கு நான் சரியாக இல்லை, என்னை நடிக்க வைக்க விருப்பம் இல்லை, யாரோ ஒருவரின் காதலி நடிப்பதற்கு என பல காரணங்களைச் சொல்வேன். ‘நான் அதைவிட சிறந்தவன், நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று நாம் அனைவரும் சமாதானம் சொல்லலாம். ஆனால், அது உண்மையல்ல!
நிராகரிப்பை உணர உங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது குறித்தான தெளிவு கிடைக்கும். இதை நான் செய்தேன். அதனால்தான் இப்போது நான் இருக்கும் இடம் கிடைத்துள்ளது. நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்றார். மேலும், இந்தத் துறை அரசியல் உண்மையிலேயே எனக்கு சோர்வாக இருந்தது. அதனால், ஒரு பிரேக் எடுக்க விரும்பினேன்” என்று பேசியுள்ளார்.