பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
பழம்பெரும் நடிகை ஜமுனா 1936-ம் ஆண்டு கர்நாடகாவின் ஹம்பியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜனா பாய். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பதில் ஆர்வமாக இருந்த ஜமுனா மேடைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் தனது தாயின் ஊக்கத்துடன் குரல் இசை மற்றும் ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். ஜமுனாவின் மேடை நிகழ்ச்சியை பார்த்த, டாக்டர் கரிகிபதி ராஜா ராவ் 1952-ல் தனது ‘புட்டில்லு’ திரைப்படத்தில் ஜமுனாவுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இதன் மூலம் தனது 16-வது வயதில் ஜமுனா திரையுலகில் அறிமுகமானார்..

ஜமுனா தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் ‘பணம் படுத்தும் பாடு’ , ’தெனாலி ராமன்’ , மனிதன் மாறவில்லை, குழந்தையும் தெய்வமும், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.. 1967-ம் ஆண்டு வெளியான மிலன் என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது..
ஜமுனா எஸ்.வி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக இருந்த ரமணா ராவ் என்பவரை 1965-ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார்.
இதனிடையே 1980களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1989-ல் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் அவர் 1991 தேர்தலில் தோல்வியடைந்த்தால் அரசியலில் இருந்து விலகினார், ஆனால் 1990களின் பிற்பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவருக்கு வம்சி ஜூலூரி என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.