பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.. அவருக்கு வயது 78.
1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. மல்லிகை, என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை வாணி ஜெயராம் பாடி உள்ளார்..

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. மேலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், தென்னிந்திய திரைப்பட இசையில் அவர் செய்த சாதனைகளுக்காக ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வாணி ஜெயராம் இன்று காலமானார்.. அவரின் மறைவு இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..