6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் 6ம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு உதாரணத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற தலைப்பின்கீழ் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் உதாரணங்களுக்கு சீட்டுக்கட்டுக்களை கூற வேண்டிய அவசியம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்த கல்வியாண்டு முதல் கணக்கு பாடங்களில் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 6ஆம் வகுப்பு பாட நூலில் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்களில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக புதிதாக உதாரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடப் புத்தகத்தில் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டு கட்டு கணக்கும் அதற்கான கேள்விகளும் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் பாடபுத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.