பீகாரில் மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, அப்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசத் தொடங்கிய இருவரும் பின்னர் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணவர் வேலைக்கு சென்றவுடன் அந்த இளைஞருக்கு போன் செய்து வரவழைத்து இருவரும் உல்லாசமாக நேரத்தை கழித்துள்ளனர். இந்த சந்திப்பு அக்கம் பக்கத்தினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, சில தினங்கள் முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்கு சென்று விட, இளம்பெண் அந்த இளைஞருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி அப்பெண்ணை அழைத்துள்ளனர். இருவரும் வெளியே வரவே ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர்கள், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வந்த பெண்ணின் கணவர், தன் மனைவியின் செயலைக் கண்டு நிலைகுலைந்து போனார். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார். தன்னுடைய தவறான செயலைக் கண்டு அப்பெண் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்படாத நிலையில், மனைவிக்கு எது சந்தோஷமோ அப்படியே இருக்கட்டும் என கணவர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.