fbpx

மலரும் நினைவுகளை மீண்டும் நம் மனதிற்கு கொண்டுவருவோம்!… இன்று உலக வானொலி தினம்!

அந்த காலத்தில் ஒரு தகவலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம் எதுவென்றால் அது வானொலி தான். ஆனால் தற்போது நாகரிக வளர்ச்சியால் நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்து டி.வி, மொபைல் போன், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல்களை பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டாலும், வெகுஜன ஊடகத்தின் முன்னோடி சாதனமாக இன்றும் இருப்பது வானொலி மட்டும் தான். இதற்கு டீ கடை சந்துகளும், ஆட்டோக்களில் ஒலிக்கும் பல பாடல்களே சாட்சி.

இப்படிப்பட்ட வானொலியானது இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி என்பவரால் கடந்த 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1901 ஆம் ஆண்டு முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சொல்லப்போனால் மார்க்கோனிக்கு முன்னரே ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே, ஹென்றிச் ஹெர்ட்ஸ் என பல விஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றி டிரான்ஸ்மீட்டர்களை உருவாக்க முயன்றிருந்தாலும், முழு வடிவமாக, ரேடியோவாக வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை குலீல்மோ மார்க்கோனி அவர்களையே சேரும்.

பின் இது வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் பரவ துவங்கி கொந்தளிப்பு மிக்க நேரங்களில் முக்கிய இயங்குதளமாக செயற்பட்டு (உலக போர், புரட்சிகள்), சமூகங்களை ஒன்று திரட்டி வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமைதியான நேரங்களிலும், மோதல் மற்றும் அவசர நிலைமைகளிலும் இந்த வானொலிகளானவை தகவல் மற்றும் அறிவுக்கான உயிர்நாடியாக விளங்கியதால் பல நாடுகளில், நகரங்கள் முதல் கிரமங்கள் வரை வானொலியின் குரலோசை கேட்க துவங்கியது .

நமது இந்தியாவை பொறுத்தவரை 1927 ஆம் ஆண்டு மும்பை, மற்றும் கொல்கத்தாவில் முதன் முதலாக வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டு, பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட ஸ்தாபனமாக பிரசார் பாரதி மாறியது. தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, உதகை, திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால், நாகர்கோவில், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது தவிர இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இங்கு உண்டு. அதேபோல் இன்றைக்கு இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் என 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இப்படி பல பெருமைகளையும், பல வரலாறுகளையும் படைத்து பயணித்து வரும் ‘வானொலி’ இன்று பலரது பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது என்பது வருத்தத்திற்குரிய உண்மை. புதிய சாதனங்கள், புது புது அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை முன்னோக்கி கொண்டு சென்றாலும், பின்னோக்கி திரும்பி பார்த்து பல விஷயங்களை அசை போட, மலரும் நினைவுகளை நம் மனதில் கொண்டு வர முயலும் ஒரே ஊடகம் என்றால் அது நம் வானொலி மட்டும் தான். அப்படிப்பட்ட ‘வானொலி’ கென்று ஒரு தினம் வேண்டும் என முடிவு செய்த உலக நாடுகள்.

கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா-வின் 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பல நாடுகளின் ஒப்புதலோடு பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. அதன் படி முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 பிப்ரவரி 13 -இல் கொண்டாடப்பட்டது.

இதன் நோக்கமே வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே. அந்த வரிசையில் இன்று 2023ம் ஆண்டுக்கான உலக வானொலி தினத்தின் கருப்பொருளாக ‘வானொலி மற்றும் அமைதி’ என்ற விஷயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் வானொலியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே ஆகும்.

Kokila

Next Post

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்பு..? பாமாயிலுக்கு பதில் இனி இதுதான்..!!

Tue Feb 13 , 2024
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளாக பாதித்த தேங்காய்க்கு உரிய விலை […]

You May Like