இந்த அழகிய உலகம் இயல்பாகச் சுழல வேண்டும் என்றால் அது பசிப்பிணி இல்லாத உலகமாக மாறவேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு ஆகும். தமிழரின் பண்பாட்டை ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு சேர எழுப்பும் குரல் விருந்தோம்பல் ஆகும். அந்தவகையில் உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி சர்வதேச உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பசி, பட்டினி ஒழிந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக உலக உணவு தினம் கடைப்பிடிப்படுகிறது.
கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த உலக உணவு தினம், ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஐ.நா. பொது கூட்டத்தில் சிறப்பு தினமாக அறிவிக்கபப்ட்ட இத்தினத்தை ஆண்டுதோறும் பல்வேறு நாடுகள் கொண்டாடி வருகின்றது.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்யவேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட சக்தியை நாம் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி உணவு உட்கொள்வது மூலமே உடலுக்கு கிடைக்கிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எப்படியோ, அதே போலத்தான் உடலுக்கு உணவும். ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது. அத்தியாவசியம் என்பதை மறந்து, போகிற போக்கில் செய்கிற காரியம் ஆக உணவு உட்கொள்வதை கொண்டு வந்துவிட்டோம். வேலை பளு காரணமாக சாப்பிடவில்லை என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போகிறவர்களும் உண்டு.
நகரமயமாதல் போன்ற காரணங்களால் விவசாயம் அழிந்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. குறைந்த காலங்களில் அதிக மகசூல் வேண்டி இயற்கைக்கு எதிராக உணவுப் பொருட்களை விளைவிப்பதும், உணவு விஷமாகும் ஆபத்துதான் எனவும் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு என்பது அளவை பொருத்து இல்லை எனக் கூறும் மருத்துவர்கள், வயிறு முட்ட ஊட்டச்சத்து இல்லாத உணவு உண்பதைக் காட்டிலும், சீரான இடைவெளியில் ஊட்டச் சத்தான உணவை உட்கொள்ளுதலே பயன் தரக்கூடியவை என்றும் அறிவுரை கூறுகின்றனர். உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவு. ஆனால் வயிற்றை நிரப்பி பசியை போக்க மட்டுமே உணவு என்ற நிலை வந்து விட்டதாகவும், இதுவே ஊட்டச்சத்து குறைவான தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, நாளும் ஒருபடி அரிசியை ஒவ்வொருவரும் தந்தாலே என்ன அதிசயம் நிகழும் என்பதை காமராசரின் பிடியரிசி திட்டம் மூலமாக நாம் அறிந்திருப்போம். ஆனால் இன்று பல திட்டங்கள் இருந்தும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளோம். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றைக்கும் கோடிக்கணக்கில மக்கள் பசியால் தவிக்கிறார்கள். எச்சில் படாத மிச்சமான பொருள்களை மற்றவர்களுக்கு கொடுப்பது. அளவாக சமைப்பது, திட்டமிட்டு பொருள் வாங்குவது போன்ற வழிகளை இனிமேலாவது நாம் பின்பற்றினால், உலகில் பசியால் யாரும் கஷ்டப்படவில்லை என்ற நிலைமை வந்துவிடும்.