சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த மருத்துவமனைக்கே நேரில் சென்றுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், அங்கு சென்ற உதயநிதிக்கு சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதனை குறித்து விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மருத்துவர் பாலாஜியின் உடலின் தலை பகுதியில் 4 காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தீவிரமாக மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவர் தனது தாயுடன் இந்த மருத்துவமனைக்கு தொடர்ந்து 6 மாதங்களாக வந்துள்ளார்.
இதனால், அவர் மீது யாருக்கும்.. மருத்துவர் பாலாஜிக்கு அவர் மீது எந்த சந்தேகம் ஏற்படவில்லை. அவர் எதற்காக மருத்துவரை குத்தினார் என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறோம். மருத்துவர் பாலாஜி மிகவும் நல்ல மனிதர். அவர் உடல் சீராக உள்ளது. அவர் விரைவில் மீண்டு வருவதற்கான தீவிர சிகிச்சையை சக மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக மருத்துவருக்கு சிகிச்சை அளிப்பதை தான் பார்க்கிறோம்.
கண்டிப்பாக மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழக மருத்துவ சங்கம் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.